November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிறிஸ் கெய்லின் அதிரடி வீணானது; பஞ்சாபை வீழ்த்தியது ராஜஸ்தான்

(photo:BCCI/IPL)

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பைக்கு பிறகு பிளேவ் ஒப் சுற்றுக்கு முன்னேறப் போகும் எஞ்சிய மூன்று அணிகளும் எவை என்ற குழப்பம் எழுந்துள்ளது. கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றிபெற்றதை அடுத்து இந்த நிலைமை உருவாகியுள்ளது.

துபாயில் நடைபெற்ற தீர்மானமிக்க லீக் ஆட்டத்தில் கிங்ஸ் இலவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் விளையாடின. முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி ஓர் ஓட்டத்தைப் பெற்று முதல் ஓவரின் கடைசி பந்தில் முதல் விக்கெட்டை இழந்தது. மந்தீப் சிங் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.

ஆனாலும், அடுத்து இணைந்த அணித்தலைவர் லோகேஷ் ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் ஜோடி அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து மிரட்டல் விடுத்தது. 120 ஓட்டங்கள் பகிரப்பட்ட நிலையில் லோகேஷ் ராகுல் 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

கிறிஸ் கெய்ல் சிக்ஸர்களை பறக்கவிட்டு ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை பந்தாடினார். இருபது20 கிரிக்கெட் அரங்கில் ஆயிரம் சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். 63 பந்துகளை எதிர்கொண்ட கெய்ல் 8 சிக்ஸர்கள், 6 பௌண்டரிகளுடன் 99 ஓட்டங்களைக் குவித்து ஜொப்ரா ஆச்சரின் பந்துவீச்சில் போல்டானார்.

93 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது சிக்ஸரை விளாசிய கெய்ல் அடுத்த பந்தில் போல்டாகி சதத்தை தவறவிட்ட ஏமாற்றத்தில் துடுப்பை வீசி எறிந்த காட்சியும் அதன் பின்னர் தனக்கே உரித்தான பாணியில் பந்துவீச்சாளரின் திறமையை பாராட்டி தட்டிக்கொடுத்துவிட்டு களத்தைவிட்டு வெளியேறினார்.

கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்களைப் பெற்றது. ஜொப்ரா ஆச்சரும், பென் ஸ்டொக் ஸும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

வெற்றிக்கு 185 ஓட்டங்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு பென் ஸ்டோக்ஸ் சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தார். இவரது அதிரடி ஆட்டத்தின் மூலம் ராஜஸ்தான் அணி 4.4 ஓவர்களில் 50 ஓட்டங்களைக் கடந்தது.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் தலையிடி கொடுத்த பென் ஸ்டோக்ஸ் 26 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பௌண்டரிகளுடன் 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அவரது இந்த அதிரடி ஆரம்பமே ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

ரொபின் உத்தப்பா 30 ஓட்டங்களையும், சஞ்சு சம்ஸன் 25 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளுடன் 48 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வித்திட்டனர். அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் – ஜோஸ் பட்லர் ஜோடி 19 பந்துகளில் 41 ஓட்டங்களை விளாசி வெற்றியை தம்வசப்படுத்திக்கொண்டது.

ஸ்டீவன் ஸ்மித் 31 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 22 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 17.3 ஓவர்களில் வெற்றியை அடைந்து ஓட்ட வேகத்திலும் சிறந்த நிலைக்கு உயர்ந்தது.

புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் 12 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும், ராஜஸ்தான் 10 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்திலும் உள்ளன. எனவே, ராஜஸ்தான் அணி அடுத்த ஆட்டத்தில் வெற்றிபெற்று பஞ்சாப் தோல்வியடைந்தாலே பிளே ஒப் சுற்று குறித்து எதிர்பார்க்க முடியும்.

பஞ்சாப் அணி தனது கடைசி ஆட்டத்தில் வெற்றிபெற்றாலும் நிகர ஓட்ட வேகத்தின் அடிப்படையிலேயே பிளே ஒப் சுற்று தீர்மானிக்கப்படும். ஏற்கனவே பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ், டெல்லி கெபிடெல்ஸ் அணிகள் தலா 14 புள்ளிகளுடன் பிளே ஒப் சுற்றுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.