உலகின் முதல் நிலை டெனிஸ் வீரரான நொவெக் ஜோகோவிச், அவுஸ்திரேலியாவில் தங்க அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
இதனால் அவர், அங்கிருந்து நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த 6 ஆம் திகதி சென்றிருந்த சேர்பியாவை சேர்ந்த நொவெக் ஜோகோவிச், அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படாது அவரின் வீசா இரத்துச் செய்யப்பட்டது.
கொவிட் தடுப்பூசி தொடர்பான ஒழுங்குவிதிகளை அவர் பின்பற்ற தவறியதாக தெரிவித்தே அவருக்கு அவுஸ்திரெலியாவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்குபற்றும் அனைத்து வீரர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளமையை உறுதி செய்ய வேண்டும். அதன்படி தடுப்பூசி போடாமல் இருந்தால், அதற்கான தகுதி வாய்ந்த மருத்துவ சான்றிதழை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
இவ்வாறான நிலைமையில் ஜோகோவிச், 6 ஆம் திகதி இரவு மெல்போர் விமான நிலையத்தை சென்றடைந்த பின்னர் அவரை அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்பதுடன் அவரின் வீசா இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதிகாரிகளின் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக அவர் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு அவர் தீர்மானித்த ஜோகோவிச், சட்டத்தரணிகள் குழுவொன்றின் ஊடாக பெடரல் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பாக இன்று தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், அதிகாரிகளின் தீர்மானம் நியாயமற்றது என்று அறிவித்துள்ளது. இதன்படி அவர் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய வாய்ப்பளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் தமது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் ஜோகோவிச்சின் விசாவை மீண்டும் இரத்து செய்தார்.
அவர் அந்நாட்டில் இருப்பது தடுப்பூசிக்கு எதிரான உணர்வைத் தூண்டும் விதமாக உள்ளது என்றும் குடிவரவுத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதை எதிர்த்து ஜோகோவிச் மீண்டும் நீதிமன்றத்தை நாடினார்.
இந்நிலையில் அரசு மற்றும் ஜோகோவிச் தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது. அமர்வில் இருந்த மூன்று நீதிபதிகளும் ஒருமனதாக அவர், அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளனர்.