January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குசல், தனுஷ்க, நிரோஷனுக்கு போட்டித் தடைகள் நீக்கம்!

ஒழுக்க மீறல் குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் அணியின் குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி இலங்கையில் நடைபெறவுள்ள சிம்பாம்வே அணிக்கு எதிரான தொடரில் இந்த மூன்று வீரர்களும் விளையாடுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

2021 ஜுன் மாதத்தில் இங்கிலாந்தில் வைத்து கொவிட்-19 கட்டுப்பாட்டு வலய விதிமுறையை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட, குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு போட்டித் தடை விதிக்க இலங்கை கிரிக்கெட் சபையினால் நியமிக்கப்பட்ட ஒழுக்காற்று குழு முன்னர் தீர்மானித்திருந்தது.

அதன்படி, இலங்கை கிரிக்கெட் சபையானது, தேசிய அணி மற்றும் வீரர்களின் எதிர்காலம் தொடர்பில் கருத்திற் கொண்டு, இந்த வீரர்கள் மூவருக்கும் உள்ளூர் போட்டிகளில் விளையாட 6 மாதங்கள் தடையும், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஒரு வருட போட்டித் தடையும், 10 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

அதுமாத்திரமின்றி, மேற்குறித்த மூவரும்  எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதிக்குள் இலங்கை கிரிக்கெட் சபையின் விதிமுறைகளை மீறி செயற்பட்டால், மேலும் ஒரு வருடத்துக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அவர்களுக்கான போட்டித் தடைகளை நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.