October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆறுதல் வெற்றியை நோக்கி சென்னை

(Photo:BCCI/IPL)

ஐ.பி.எல் இருபது20 கிரிக்கெட் தொடரில் கிட்டத்தட்ட பிளே ஓவ் வாய்ப்பை இழந்துவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 13 ஆவது ஆட்டத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடரஸ் அணியுடன் விளையாடவுள்ளது.இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரை கொல்கத்தா அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது.

12 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள கொல்கத்தா அணி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று ஐந்தாமிடத்தில் இருக்கிறது.

இதனால் இன்றைய ஆட்டத்தையும் அதேபோன்று எதிர்வரும் முதலாம் திகதி ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தையும் வெற்றிகொண்டால் மிக இலகுவாக பிளே ஓவ் சுற்றுக்கு தகுதிபெற முடியும்.

எனவே, இன்று வெற்றிபெறுவதற்கு கொல்கத்தா அணி முழு முயற்சி எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் அந்த வாய்ப்பு அணித்தலைவர் இயோர்ன் மோர்கன், தினேஸ் கார்த்திக், சுப்மன் கில், நித்திஷ் ராணா ஆகியோரின் துடுப்பாட்டத் திறனிலேயே தங்கியுள்ளது.

இவர்கள் சிறப்பாக ஓட்டங்களைக் குவிக்கும் அதேவேளை ஜேம்ஸ் பெட்டின்ஸன், வருன் சக்கரவர்த்தி, பேர்கஸன் ஆகியோரும் பந்துவீச்சில் ஆற்றலை வெளிப்படுத்தினால் மாத்திரமே கொல்கத்தா அணியால் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை இன்றைய போட்டியில் வியத்தகு வெற்றியை ஈட்டினால் மாத்திரமே ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம்.

அதாவது இன்று  அதிவேகத்தில் வெற்றிபெறுவதோடு கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிக்கு எதிராகவும்  வெற்றிபெற்றால் சென்னை அணிக்கு ஏதாவதொரு வாய்ப்பு கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கலாம்.

அத்துடன் ராஜஸ்தான் ரோயல்ஸ், கிங்ஸ் இலவன் பஞ்சாப், சன்ரைசஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் தாம் பங்கேற்கும் சகல ஆட்டங்களிலும் தோல்வியடைந்தாக வேண்டும்.ஆனால் இது சாத்தியமற்ற ஒன்றாகவே திகழ்கின்றது.

இதனால் இன்றும் அடுத்த ஆட்டத்திலும் ஆறுதல் வெற்றியைப் பெறுவது மாத்திரமே சென்னை அணிக்குள்ள ஒரே முயற்சியாகவுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனிக்கு இது பெரும்பாலும் கடைசி தொடராகவே கணிக்கப்படுகின்றது. தற்போதைய அவரது ஆட்டத்திறன் அதனை உணர்த்துகின்றது.

எனவே, மஹேந்திர சிங் தோனியின் ஆட்டத்தை கிரிக்கெட் அரங்கில் காணும் கடைசி சந்தர்ப்பமாக இந்த நாட்கள் இருக்கின்றன. சர்வதேச அரங்கிலும் ஓய்வுபெற்றுவிட்ட அவர் இதற்கு மேல் ஐ.பி.எல்லில் விளையாடுவதும் சந்தேகமே.

இதனால் இதுவரைக் காலமும் பெற்ற அனுபவத்தையும், நன்மதிப்பையும் பாதுகாத்துக் கொள்ளும் வண்ணம் தோனி துடுப்பெடுத்தாட முயற்சிப்பார் என எதிர்பார்க்கலாம்.

அவருடன் பெப் டு பிலெசி, ஷேன் வொட்ஸன், ரவிந்ர ஐடெஐh ஆகியோரும் திறமையை வெளிப்படுத்தினால் சென்னை அணிக்கு அது பேருதவியாக இருக்கும்.