கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.
அனைத்து போட்டிகளும் கராச்சியில் நடைபெறுகின்றன. இதில் முதலில் நடைபெற்ற டி-20 தொடரை 3-0 என பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.
இந்த நிலையில், டி-20 தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த ஷெல்டன் கொட்ரெல், ரொஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ் உட்பட 4 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் உட்பட 5 பேருக்கு நேற்று (16) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ அதிகாரிகளின் கண்கானிப்பில் வைக்க பாகிஸ்தான் சுகாதார தரப்பினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எனவே, ஏற்கெனவே 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
எவ்வாறாயினும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையும் இந்த விடயம் தொடர்பில் இன்று விசேட பேச்சுவார்த்தையொன்றை மேற்கொண்டது.
இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாளை தொடரை ஒத்திவைப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், இத்தொடர் ஐ.சி.சியின் ஒருநாள் உலகக் கிண்ண சுப்பர் லீக்கின் ஒரு பகுதியாக இருப்பதால், அடுத்தாண்டு ஜூன் முதல் வாரத்தில் இத்தொடர் மீண்டும் நடைபெறும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதனிடையே, புதன் மற்றும் வியாழன் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகளில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட நபர்கள் மட்டுமே கடைசி டி-20 போட்டிக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்து புறப்படுகின்றனர்.
மற்றையவர்கள் தனிமைக் காலத்தை முடித்த பிறகே புறப்படுவார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.