January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்கா சென்றடைந்தது

தென்னாபிரிக்கத் தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, புறப்பட்டுச் சென்றது.

தென்னாபிரிக்கா செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

தென்னாபிரிக்காவில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கும் நிலையிலும் இந்திய அணி அங்கு சென்றுள்ளது.

இந்திய அணிக்காக கடுமையான கொவிட்-19 கட்டுப்பாட்டு வலயத்தை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை உருவாக்கியுள்ளது.

அத்துடன், போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை, வீரர்கள் தங்குமிடம், பயிற்சி மைதானம் ஆகியவற்றில் வெளிநபர்கள் எவரும் வருவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது.

இதுஇவ்வாறிருக்க, இந்திய அணியின் உப தலைவர் ரோகித் சர்மாவுக்குப் பயிற்சியின்போது காயம் ஏற்பட்டதால், அவர் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பிரியங்க் பஞ்சால் சேர்க்கப்பட்டுள்ளார்.

விராட் கோலியிடம் இருந்து ஒருநாள் அணியின் தலைவர் பதவி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவிடம் வழங்கப்பட்டது.

இதனால் இருவருக்கும் இடையே முறுகல் நிலை எழுந்ததாக கடந்த சில நாட்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது.

ஆனால், அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனக்கும், ரோகித் சர்மாவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஒருநாள் தொடரில் விளையாடுவேன் என்று விராட் கோலி விளக்கம் அளித்தார்.

இதனிடையே, ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் இல்லாத நிலையில் மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் ஆரம்ப வீரர்களாக களமிறங்குவார்கள் எனத் தெரிகிறது.

அதேபோல, ரோகித் சர்மாவுக்குப் பதிலாக இந்திய அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட மற்றொரு ஆரம்ப வீரரான பிரியங்க் பஞ்சாலுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.