Photo: Twitter/ICC
டி-20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மொஹமட் ரிஸ்வான் படைத்துள்ளார்.
பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், நேற்று (16) 3ஆவது மற்றும் கடைசி டி-20 போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 208 என்ற இமாலய இலக்கை 18.5 ஓவர்களில் துரத்தி அடித்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணியை 3 க்கு 0 என பாகிஸ்தான் வைட் வொஷ் செய்தது.
பாகிஸ்தான் அணியின் வெற்றியில் ஆரம்ப வீரரும், விக்கெட் காப்பாளருமான மொஹமட் ரிஸ்வான் முக்கிய பங்கு வகித்தார்.அவர் 45 பந்துகளில் 87 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இதனிடையே, இந்த ஆண்டில் டி-20 போட்டிகளில் 2 ஆயிரம் ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
டி-20 போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மொஹமட் ரிஸ்வான், அண்மையில் நடைபெற்ற டி-20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவை வீழ்த்தவும் முக்கிய காரணமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.