இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்பதற்கு அழைப்பு வந்தால் அதனை பரிசீலிக்க தயார் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ரொஷன் மஹாநாம தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ‘தனது சுயசரிதை’ புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதில் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக பதவியேற்குமாறு தனக்கு 4 மாதங்களுக்கு முன்னர் அழைப்பு வந்ததாகவும் ரொஷான் மஹாநாம குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியை பொறுப்பேற்றால், அவருக்கு பல தேவைகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பயிற்சியாளரின் மாற்றத்தினால் அனைத்தையும் மாற்ற முடியும் என தாம் நம்பவில்லை எனவும், ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் பெறுபேறுகளை அடைய முடியும் எனவும் ரொஷான் மஹாநாம மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் இலங்கை வீரர் அவிஷ்க குணவர்தனவும் விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.