January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் 2021: வியாஸ்காந்தின் அசத்தல் பந்து வீச்சினால் ஜப்னா கிங்ஸுக்கு வெற்றி

டொம் கொலர்-கெட்மோரின் அதிரடி துடுப்பாட்டம் மற்றும் யாழ். வீரர் வியாஸ்காந்தின் அபார பந்துவீச்சின் உதவியால் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 102 ஓட்டங்களால் ஜப்னா கிங்ஸ் அணி அபார வெற்றியீட்டியது.

எல்.பி.எல் தொடரில் இன்று (16) நடைபெற்ற 17 ஆவது லீக் போட்டியில் ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. இதில், ஜப்னா கிங்ஸ் அணியில் முக்கியமான இரண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தன.

அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் அஷான் ரந்திக ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து, 193 ஓட்டங்களை எடுத்தது.

அந்த அணியின் துடுப்பாட்டத்தில் டொம் கொலர்-கெட்மோர் 55 பந்துகளுக்கு முகங்கொடுத்து 8 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 92 ஓட்டங்களையும், உபுல் தரங்க 37 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

194 என்ற கடினமான வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி, 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 91 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து, 102 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்காக டொம் பெண்டன் 30 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, ஜப்னா அணியை பொருத்தவரை, ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளையும், வியாஸ்காந்த் 3 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தியிருந்தனர்.

இந்த தொடரில் முதல் போட்டியில் விளையாடி பந்துவீச ஆரம்பித்த வியாஸ்காந்த், தன்னுடைய முதல் ஓவரில் குசல் பெரேராவை வீழ்த்தி அபாரம் காண்பித்தார். தொடர்ந்து டொம் பெண்டன் மற்றும் கீமோ போல் ஆகிய இருவரினதும் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார்.

ஜப்னா கிங்ஸ் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில், முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது.

அத்துடன், பிளே-ஒப் சுற்றில் முதலாவது குவாலிபையர் போட்டியில் விளையாடும் தகுதியை அந்த அணி பெற்றுக் கொண்டது.