தனது சொந்த கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானமொன்றை உருவாக்கி வருவதாக தமிழக வீரர் தங்கராசு நடராஜன் அறிவித்துள்ளார்.
யோர்க்கர் பந்துகளுக்குப் பெயர்போன தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளரான நடராஜன் 2020 இல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடர் மூலம் மேலும் பிரபலமானார்.
இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுமானார்.
சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த இவர், இந்திய அணிக்காக இதுவரை நான்கு டி-20, 2 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார்.
இந்த நிலையில், தற்போது காயம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருக்கும் நடராஜன், தனது சொந்த ஊரில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை நிர்மானித்து வருகின்றார்.
இதுபற்றி டுவிட்டர் பக்கத்தில் நடராஜன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
‘எனது கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி வருகிறேன். அதற்கு நடராஜன் கிரிக்கெட் மைதானம் (NCG) எனப் பெயரிடப்படவுள்ளது. கடந்த டிசம்பரில் முதன் முறையாக இந்திய அணிக்காகக் களமிறங்கினேன். இந்த டிசம்பரில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி வருகிறேன். கனவுகள் நிஜமாகும். கடவுளுக்கு நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.