பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
மூன்று டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக 26 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி டிசம்பர் 9ஆம் திகதி கராச்சியை சென்றடைந்தது.
2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தான் செல்வது இதுவே முதல் முறையாகும்.
இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி-20 போட்டி கராச்சியில் கடந்த 13ஆம் திகதி நடைபெற்றது.
மேற்கிந்திய தீவுகள் அணியில் 3 வீரர்கள் உட்பட 4 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் உட்பட 5 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, விக்கெட் காப்பாளர் ஷாய் ஹோப், இடதுகை சுழல் பந்துவீச்சாளர் அகீல் ஹொசைன், சகலதுறை வீரர் ஜஸ்டின் க்ரீவ்ஸ், உதவிப் பயிற்சியாளர் ரொட்டி எஸ்ட்விக் மற்றும் அணி மருத்துவர் டாக்டர் அக்ஷய் மான்சிங் ஆகிய 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மூன்று வீரர்களும் நடைபெற இருக்கும் போட்டிகளில் இருந்து விலக்கப்படுவார்கள் என்றும் வைரஸினால் பாதிக்கப்பட்ட 5 நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ அதிகாரிகளின் கண்கானிப்பில் உள்ளனர்.
ஏற்கெனவே 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மீதமுள்ள போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையும் இன்று பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.