January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரோகித் சர்மாவுடனான விரிசல்: மௌனம் கலைத்தார் விராட் கோலி

தனக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையில் எந்தப் பிரச்னையும் இல்லை எனவும், கடந்த 2 ஆண்டுகளாக இதற்கு விளக்கமளித்து ஓய்ந்து விட்டேன் எனவும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான தலைவர் பதவியில் இருந்து விராட் கோலியை பி.சி.சி.ஐ சமீபத்தில் அதிரடியாக நீக்கியது.

அவருக்குப் பதிலாக ரோகித் சர்மா தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதன்படி, தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர் முதல் இந்திய அணியின் ஒருநாள் அணியின் தலைவராக ரோகித் சர்மா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது .

ஒருநாள் போட்டிக்கான தலைவர் பதவியில் இருந்து விராட் கோலி பதவி விலக வேண்டும் என்று பி.சி.சி.ஐ விரும்பியது.

இதற்காக அவருக்கு 48 மணித்தியாலயம் கெடு விதிக்கப்பட்டது. ஆனால் அவர் பதவி விலக மறுத்ததால் தலைவர் பதிவியிலிருந்து நீக்கப்பட்டதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒருநாள் அணியின் தலைவர் பதவியில் தொடர்வதாக விராட் கோலி தெரிவித்த போதும், பி.சி.சி.ஐ அதனை ஏற்றுக்கொள்ளாமல் முடிவெடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனையடுத்து இந்த விவகாரம் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் எதிரொலித்தது. இந்திய அணி நாளை மறுதினம் தென்னாபிரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது.

இதற்காக அனைத்து வீரர்களும் மும்பை வந்து சேர்ந்த நிலையில் விராட் கோலி நேற்று முன்தினம் வரை மும்பையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்காமல் இருந்தார். இதனால் அவர் ஒருநாள் தொடரிலும் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியானது.

அதாவது ரோகித் சர்மா தலைவராக செயல்படபோகும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி பங்கேற்க மாட்டார் எனவும், அதேபோல விராட் கோலி தலைவராக செயல்படும் டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் எனவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக  விராட் கோலி முதல் முறையாக இன்று மௌனம் கலைத்துள்ளார். இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த அவர்,

‘நான் நிச்சயம் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவேன், எப்போதும் இந்திய அணியுடன் நான் இருப்பேன். தலைவர் பொறுப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது .அந்த தகவல்கள் முற்றிலும் பொய்யானது, இந்த சர்ச்சைகள் குறித்து அந்த சர்ச்சையை எழுப்பியவர்கள் தான்  தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, எனக்கும் ரோகித் சர்மாவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுபற்றி விளக்கம் அளித்து ஓய்ந்து விட்டேன். டெஸ்ட் அணியை தேர்வு செய்த போது, என்னிடம் ஒருநாள் அணியின் தலைமைத்துவ மாற்றம் குறித்து தெரிவிக்கப்பட்டது. நான் அப்போதே சம்மதம் என்று கூறிவிட்டேன். அதன்பிறகும் கூட பி.சி.சி.ஐ அதிகாரிகள் உடன் நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளேன். எனவே அந்த விவகாரம் அப்போதே முடிந்தது என தெரிவித்தார்.