July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.சி.சியின் நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீரராக டேவிட் வோர்னர் தெரிவு

Photo: Twitter/ICC

ஐ.சி.சியின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னரும், சிறந்த வீராங்கனையாக மேற்கிந்திய தீவுகளின் ஹெய்லி மெதிவ்ஸும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

இதன்படி, கடந்த நவம்பர் மாதம் சிறப்பாக செயல்பட்ட மூன்று வீரர்களுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐ.சி.சி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டது.

இதில் ஆண்கள் பிரிவில் அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர், பாகிஸ்தானின் ஆபித் அலி மற்றும் நியூசிலாந்தின் டிம் சௌதி ஆகியோரது பெயர்களை ஐ.சி.சி பரிந்துரை செய்திருந்தது. இதன்படி, நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீரராக அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர தெரிவாகியுள்ளார்.

டி-20 உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாவதற்கு முன் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருந்த டேவிட் வோர்னருக்கு எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியவில்லை.

இதில் அவரது துடுப்பாட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், டி-20 உலகக் கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடினார்.

இதில் 7 போட்டிகளில் விளையாடி 48.16 என்ற சராசரியுடன் 289 ஓட்டங்களைக் குவித்ததுடன், அவுஸ்திரேலிய அணி சம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக வோர்னர் இருந்தார். இதன் காரணமாக வோர்னருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல பெண்கள் பிரிவில் பாகிஸ்தானின் அனாம் அமீன், பங்களாதேஷின் நஹிடா அக்தர் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் ஹெய்லி மெதிவ்ஸ் ஆகியோர் நவம்பர் மாத சிறந்த வீராங்கனைக்கான விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

இதில் மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீராங்கனை ஹெய்லி மெதிவ்ஸ் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் 141 ஓட்டங்கள் மற்றும் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.