ஒரே ஆண்டில் டி-20 போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்றுக்கொண்ட அணி எனும் சாதனையை பாகிஸ்தான் அணி படைத்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி-20 போட்டி திங்கட்கிழமை கராச்சி மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் நிக்கொலஸ் பூரன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் மொஹமட் ரிஸ்வான், 78 ஓட்டங்களையும், ஹைதர் அலி 68 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
201 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 137 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது இதன்மூலம் 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி, நடப்பு (2021) ஆண்டில் மட்டும் 18 டி-20 போட்டிகளில் வென்று புதிய சாதனை படைத்தது.
இதன்மூலம் ஒரே ஆண்டில் டி2-0 போட்டிகளில் அதிக வெற்றிகளைக் குவித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக 2018இல் 17 டி-20 போட்டிகளில் வெற்றிகளை ஈட்டி பாகிஸ்தான் அணி சாதனை படைத்திருந்தது. தற்போது அந்த சாதனையை பாகிஸ்தானே தகர்த்துள்ளது.
நடப்பு ஆண்டில் மேலும் இரண்டு டி-20 போட்டிகளில் பாகிஸ்தான் விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.