Photo: Twitter/Cricket Australia
ஐ.சி.சியின் 19 வயதின் கீழ் உலகக் கிண்ணத் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட நிவேதன் ராதாகிருஷ்ணன் இடம்பிடித்துள்ளார்.
2022 ஜனவரி 14ஆம் திகதி முதல் மேற்கிந்திய தீவுகளில் ஐ.சி.சியின் 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட அவுஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 19 வயது சுழல் பந்துவீச்சாளரான நிவேதன் ராதாகிருஷ்ணன் என்ற தமிழ் வீரர் இடம்பிடித்துள்ளார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் இருமுறை பங்கேற்றுள்ள நிவேதன், இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இடம்பெற்றார். சுழல் பந்துவீச்சாளரான நிவேதன், இரு கைகளினாலும் பந்துவீசும் திறமை கொண்டவர்.
சென்னையைச் சேர்ந்த நிவேதன், பத்து வயது முதல் அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். அவுஸ்திரேலியாவின் டாஸ்மானியா அணிக்காக விளையாடி வருகின்ற அவர், அவுஸ்திரேலிய அணிக்காக 16 வயதின்கீழ் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
தற்போது 19 வயதின்கீழ் அவுஸ்திரேலிய அணியின் உலகக் கிண்ண அணியிலும் முதல் முறையாக இடம்பெற்றுள்ளார்.