July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ஜப்னா கிங்ஸின் அடுத்த போட்டிகளில் தமிழ் வீரர்களுக்கு வாய்ப்பு”; திசர பெரேரா

எல்.பி.எல் தொடரின் எஞ்சிய லீக் போட்டிகளில் ஜப்னா கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தமிழ் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக, அந்த அணியின் தலைவர் திசர பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற தம்புள்ள ஜயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜப்னா கிங்ஸ் அணி வெற்றிபெற்றிருந்தது. குறித்த போட்டி நிறைவுபெற்ற பின்னர் கருத்து வெளியிட்ட போதே, திசர பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இம்முறை எல்.பி.எல் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணி, இதுவரை விளையாடியுள்ள ஆறு போட்டிகளில் முடிவில் முதல் போட்டியில் மாத்திரம் தோல்வியடைந்த நிலையில், அடுத்த ஐந்து போட்டிகளிலும் வெற்றிபெற்று, பிளே-ஓப் சுற்றுக்கு தகுதிபெற்றது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியின் பின்னர் கருத்து வெளியிட்ட திசர பெரேரா, ஜப்னா கிங்ஸ் அணியை வழிநடத்துவதில் பெருமையடைகிறேன். இதுவொரு பெருமைக்குரிய விடயம். இந்த போட்டியை பொருத்தவரை, மழை காரணமாக மைதானம் முழுமையாக மூடப்பட்டிருந்தமையால், முதலில் துடுப்பெடுத்தாடுவது கடினம் என்பதை உணர்ந்தேன். நாம் அணியின் கட்டமைப்பு தொடர்பில் சிந்திக்கிறோம். அதேநேரம், எம்மால் இப்போது, சில உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுக்க முடியும்’ என்றார்.

அந்தவகையில், ஜப்னா கிங்ஸ் அணியில் உள்ளூர் வீரர்களாக, வடக்கு, கிழக்கு வீரர்கள் உட்பட 7 வீரர்கள் இதுவரையில் போட்டிகளில் விளையாடாமல் உள்ளனர்.

இதில், வட மாகாண வீரர்களான சகலதுறை வீரர் தெய்வேந்திரம் டினோஷன், சுழல் பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் கிழக்கு மாகாண வீரரான வேகப் பந்துவீச்சாளர் ரட்னராஜா தேனுரதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். எனவே, இதில் ஒரு வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், ஏனைய வீரர்களாக கிரிஷான் சஞ்சுல, சாமிக்க குணசேகர, பிரவீன் ஜயவிக்ரம மற்றும் அஷான் ரந்திக ஆகியோரும் இதுவரை போட்டிகளில் விளையாடவில்லை.

எனவே, இதில் சில வீரர்களுக்கு அடுத்த போட்டிகளில் ஜப்னா கிங்ஸ் அணி வாய்ப்பு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.