July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் 2021: முதல் அணியாக பிளே-ஒப் சுற்றுக்கு தகுதிபெற்றது ‘ஜப்னா கிங்ஸ்’

 

ஶ்ரீலங்கா பிரீமியர் லீக் தொடரில், தம்புள்ள ஜயண்ட்ஸ் அணியுடன் திங்கட்கிழமை இரவு கொழும்பில் நடைபெற்ற 14 ஆவது லீக் போட்டியில் 7 விக்கெட்டுக்களால் ஜப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம் இம்முறை எல்.பி.எல் தொடரில் பிளே-ஒப் சுற்றுக்கு முதல் அணியாக ஜப்னா கிங்ஸ் அணி தகுதிபெற்றது.

மழையின் குறுக்கீடு காரணமாக இரவு ஒன்றை மணித்தியாலங்களுக்குப் பிறகு ஆரம்பித்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி, எதிரணியின் சுழல் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 69 ஓட்டங்களை எடுத்தது.

எல்.பி.எல் தொடரில் அணியொன்று பதிவுசெய்த குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையாக இது இடம்பிடித்தது.

தம்புள்ள அணியின் துடுப்பாட்டத்தில் பில் சோல்ட் 23 ஓட்டங்களையும், தரிந்து ரத்னாயக்க 14 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுக்க, மற்றைய வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினர்.

ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் சதுரங்க டி சில்வா 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், மஹீஷ் தீக்‌ஷன 3 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

இதனையடுத்து 70 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கைத் துரத்திய ஜப்னா கிங்ஸ் அணி, 9.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 71 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கை அடைந்தது.

ஜப்னா அணியின் துடுப்பாட்டத்தில் வனிந்து ஹஸரங்க 37 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 22 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இறுதியில் 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய ஜப்னா கிங்ஸ் அணி, முதல் அணியாக எல்.பி.எல் பிளே-ஒப் சுற்றுக்கு தகுதிபெற்றது.

இதனிடையே, போட்டியின் ஆட்டநாயகன் விருது சதுரங்க டி சில்வா தெரிவாகினார்.