இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2022 ஜனவரி முதலாம் திகதி முதல் ஒரு வருட காலத்துக்கு மஹேல ஜயவர்தன இப்பதவியை வகிப்பார் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு இலங்கை அணி ஏராளமான சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றவுள்ள நிலையில், இலங்கை அணியுடன் மீண்டும் மஹேல ஜயவர்தன இணைவது குறித்து தாம் மிக மகிழ்ச்சியடைவதாக இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்நியமனம் குறித்து மஹேல ஜயவர்தனவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள ஐ.சி.சியின் இளையோர் உலகக் கிண்ணத்தில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் ஆலோசகராகவும் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நிறைவுக்கு வந்த டி-20 உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் சுற்றில், இலங்கை அணியின் ஆலோசகராக மஹேல ஜயவர்தன செயல்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும், ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.