November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முதல் ஆஷஸ் டெஸ்ட்டில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணிக்கு அபராதம்

Photo: Twitter/ICC

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட இங்கிலாந்து அணிக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 100 சதவீதம் அபராதம் விதித்து ஐ.சி.சி உத்தரவிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இதில் இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் ஐந்து ஓவர்கள் பின்தங்கியதாக ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி இன் விதிமுறைகளின் படி, குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசத் தவறிய ஒவ்வொரு ஓவர்களுக்கும் வீரர்களின் போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

இதன்பபடி, இங்கிலாந்து அணி வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 100 சதவீத அபராதம் விதிக்க போட்டி மத்தியஸ்தர் டேவிட் பூன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும், ஐசிசியின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணி பெற்ற புள்ளிகளிலிருந்து மேலும் 5 புள்ளிகள் குறைப்பதற்கும் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் 14 புள்ளிகளுடன் இருந்த இங்கிலாந்து அணி, தற்போது 5 புள்ளிகளை இழந்து 9 புள்ளிகளை மட்டுமே பெற்றுக்கொண்டுள்ளது.

அத்துடன், ஐ.சி.சி இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணி தற்போது 6ஆவது இடத்தில் இருந்து 7ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, அவுஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இலங்கை அணி தொடர்ந்து முதலிடத்திலும் பாகிஸ்தான் 3ஆவது இடத்திலும், இந்தியா 4ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.