November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நேபாளம் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் இலங்கை வீரர் நியமனம்

நேபாளம் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் புபுது தஸநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு டி.எஸ் சேனநாயக்க கல்லூரியின் பழைய மாணவரான தஸநாயக்க, இலங்கை மற்றும் கனேடிய கிரிக்கெட் அணிகளின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக விளையாடியுள்ளார்.

1993-1994 வரையான காலப்பகுதியில் இலங்கைக்காக 11 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அத்துடன், 2005 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் கனடா தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடியிருந்தார்.

அதுமாத்திரமின்றி, 2007-2011 வரை கனடா தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்ட இவர், பின்னர் 2011 முதல் 2015 வரை நேபாளம் தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றியிருந்தார்.

அவரது பயிற்றுவிப்பின் கீழ், நேபாளம் அணி 2014இல் பங்களாதேஷில் நடைபெற்ற டி-20 உலகக் கிண்ணத்தில் முதல் முறையாக பங்குகொண்டு விளையாடியது.

இதனிடையே, டி-20 உலகக் கிண்ணத்திற்குப் பிறகு நேபாளம் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்த தஸநாயக்க, 2016 முதல் 2019 வரை அமெரிக்க கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றினார்.

முன்னதாக, 2020 வரை, நேபாளம் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டேவ் வட்மோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் அவர் தனது பதவிக்காலம் முடிவதற்குள் இராஜினாமா செய்தார். இதன்படி, வாட்மோரின் இடத்திற்கு புபுது தஸநாயக்கவை நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.