July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இருந்து பாகிஸ்தான் சென்ற இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பெற்றுள்ள 3 வீரர்களுக்கும், ஒரு ஊழியருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அண்மையில் இலங்கையில் நிறைவுக்கு வந்த டெஸ்ட் தொடரில் விளையாடிய ரோஸ்டன் சேஸ் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியுடன் 3 ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த வியாழக்கிழமை கராச்சியை வந்தடைந்தனர். முதல் டி-20 போட்டி நாளை (12) கராச்சியில் ஆரம்பமாகிறது.

இந்த நிலையில், வீரர்களுக்கு கொவிட்-19 கட்டுப்பாட்டு வலயத்தை உருவாக்கும் வகையில் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களான ஷெல்டன் கொட்ரெல், ரோஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ் ஆகியோரும், ஒரு ஊழியர் என 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.

இது தொடர்பாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிவிப்பில், ‘பாகிஸ்தானுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி சென்றபின் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் கொட்ரெல், சகலதுறை வீரர் ரோஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ் மற்றும் பயிற்சியாளர் குழாத்தில் இல்லாத ஊழியர் ஒருவர் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் தொடரில் விளையாடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேனை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 வீரர்கள் மற்றும் ஊழியர் ஒருவரும் தனித்தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த 3 வீரர்கள் பாதிக்கப்பட்டாலும் அணியின் திட்டத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 வீரர்கள், ஊழியர் ஒருவரும் அடுத்த 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதால் ஒருநாள், டி-20 தொடரில் முழுமையாக பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.