
மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் பங்கேற்பதற்கு சிம்பாவே சென்றிருந்த இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் இன்று காலை நாடு திரும்பியுள்ளது.
இந்த தொடரில் பங்கேற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.
இந்த நிலையில், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் ஐ.சி.சியுடன் இலங்கை கிரிக்கெட் சபை கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தது.
அதேபோல, ஒமிக்ரோன் வைரஸ் பரவல் காரணமாக சிம்பாவே உள்ளிட்ட 6 ஆபிரிக்க நாடுகளின் விமானச் சேவைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்தது.
இதன்படி, நாடு திரும்பும் வரை சிம்பாவேயில் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினர் இன்று காலை நாட்டை வந்தடைந்தடைந்துள்ளனர்.
இத்தொடரில் பங்கேற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் வீரர்கள் 6 பேருக்கும், பயிற்சியாளர் குழாத்தில் உள்ள உறுப்பினர் ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.