July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சச்சினின் 11 ஆண்டுகால டெஸ்ட் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஜோ ரூட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக ஓட்டங்களைக் குவித்த இங்கிலாந்து வீரராக ஜோ ரூட் சாதனை படைத்துள்ளார்.

உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடரான ஆஷஸ் டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த முறை அவுஸ்திரேலியாவில் நடைபெறுகின்ற போட்டியில் இங்கிலாந்து அணி சற்று தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது.

காபா மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 147 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதன் பின்னர் விளையாடிய அவுஸ்திரேலிய அணி 425 ஓட்டங்களை எடுத்து முன்னிலை பெற்றது.

இதனால் 2 ஆவது இன்னிங்ஸிலும் இங்கிலாந்து அணி சொதப்பி மோசமான தோல்வி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஜோ ரூட் – டாவிட் மலான் ஜோடி 100 ஓட்டங்களுக்கும் மேல் இணைப்பாட்டம் அமைத்ததால் இங்கிலாந்து அணி 2 ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்களை எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் பல்வேறு முக்கிய சாதனைகளை படைத்தார்.

ஜோ ரூட் தற்போது வரை 158 பந்துகளில் 86 ஓட்டங்களை குவித்து விளையாடி வருகிறார். இந்த ஓட்டங்களுடன் சேர்த்து ஜோ ரூட் இந்த ஆண்டு மட்டும் 25 இன்னிங்ஸ்களில் 1,541 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இதன்மூலம் ஒரே ஆண்டில் அதிக ஓட்டங்களைக் குவித்த இங்கிலாந்து வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன்னர் மைக்கல் வோர்கன் முதலிடம் வகித்து வந்த நிலையில் ஜோ ரூட் முறியடித்துள்ளார்.

இந்நிலையில், இந்திய முன்னாள் வீரர் சச்சினின் சாதனை ஒன்றையும் ஜோ ரூட் முறியடிக்க காத்துள்ளார். ஜோ ரூட் இன்னும் 22 ஓட்டங்களை எடுத்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பொண்டிங்கை முந்தி 5ஆவது இடத்தைப் பிடிப்பார்.

சச்சின் டெண்டுல்கர் கடந்த 2010ஆம் ஆண்டு 1,562 ஓட்டங்களைக் குவித்தார். ரிக்கி பொண்டிங் 2005ஆம் ஆண்டு 1,544 ஓட்டங்களைக் குவித்தார்.

இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹமட் யூசுப் உள்ளார். அவர் 2006 ஆம் ஆண்டு 1,788 ஓட்டங்களை எடுத்தார். அவருக்கு அடுத்த இடங்களில் விவியன் ரிச்சர்ட்ஸ் (1,710 ஓட்டங்கள்), கிரஹம் ஸ்மித்  (1,656 ஓட்டங்கள்), மைக்கல் கிளார்க் (1,595 ஓட்டங்கள்) ஆகியோர் உள்ளனர்.