
Photo: Twitter/ Pakistan Cricket
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதால் பாகிஸ்தான் ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 2 ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்று இருந்தது.
இந்த நிலையில் டாக்காவில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் அந்த அணி இன்னிங்ஸ் மற்றும் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
ஏற்கனவே டி-20 தொடரை அந்த அணி முழுமையாக 3-0 என்ற கணக்கில் வென்று இருந்தது.
பங்களாதேஷத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதால் பாகிஸ்தான் ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 2 ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
புள்ளிப் பட்டியலில் 66.66 சதவீத புள்ளிகளில் இருந்த அந்த அணி தற்போது 75 சதவீத புள்ளிகளைப் பெற்று உள்ளது. அந்த அணி அடுத்து இலங்கையுடன் விளையாட உள்ளது.
இதேவேளை, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இலங்கை முதல் இடத்திலும் (100 சதவீத புள்ளிகள்), இந்தியா 3ஆவது இடத்திலும் (58.33 சதவீத புள்ளிகள்) உள்ளன. இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் முறையே 4 முதல் 8-வது இடங்களில் உள்ளன.