July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பதவி விலக மறுத்த விராட் கோலியை அதிரடியாக நீக்கிய பி.சி.சி.ஐ

இந்திய ஒருநாள் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலக விராட் கோலிக்கு பி.சி.சி.ஐ 48 மணித்தியாலங்கள் கெடு விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக செயல்பட்டு வந்த விராட் கோலியை அதிரடியாக அந்தப் பதவியில் இருந்து நீக்கிய பி.சி.சி.ஐ புதிய தலைவராக ரோகித் சர்மாவை நியமித்துள்ளதாக நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

ஏற்கனவே துபாயில் கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி டி-20 உலகக் கிண்ணத்துடன் டி-20 தலைவர் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். ஆனால் டி-20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடவுள்ளதாகவும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு தொடர்ந்து தலைவராக செயல்பட உள்ளதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

ஆனால் அந்த அறிவிப்புக்கு மாறாக ஒருநாள் தலைவர் பதவியில் இருந்து விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டது தொடர்பில் பல கேள்விகளையும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கிண்ணத்தை கருத்தில் கொண்டு இந்திய அணிக்கு புதிய தலைவரை நியமிக்க பி.சி.சி.ஐ கவனம் செலுத்தியிருந்தது.

இதைத்தொடர்ந்து தலைவர் பொறுப்பில் இருந்து விலகுமாறு விராட் கோலியை பி.சி.சி.ஐ வலியுறுத்தி வந்தது. ஆனால் அவர் ஒருநாள் போட்டிக்கான தலைவர் பதவியில் இருந்து விலக மறுத்து விட்டார்.

இதைத்தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ரோகித் சர்மா புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

விராட் கோலி தானாக முன்வந்து ஒருநாள் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பி.சி.சி.ஐ விரும்பியது. இதற்காக அவருக்கு 48 மணித்தியாலங்கள் கெடு விதிக்கப்பட்டது.

ஆனால் விராட் கோலி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. இதனால் பி.சி.சி.ஐ கொடுத்த கெடுவை அவர் நிராகரித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ரோகித் சர்மாவை தலைவராக நியமித்து பி.சி.சி.ஐ அதிரடி முடிவை எடுத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்திய அணியில் பிளவு இருந்ததாகவும் இதற்கு விராட் கோலியின் ஆதிக்கம்தான் காரணம் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அவரது தலைவர் பதவி பறிக்கப்பட்டு உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.