எல்.பி.எல் தொடரில் கண்டி வொரியர்ஸ் அணிக்காக விளையாடிய மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ரோவ்மன் பவல் மற்றும் டேவோன் தோமஸ் ஆகிய இருவரும் விலகியுள்ளனர்.
ரோவ்மன் பவல் மற்றும் டேவோன் தோமஸ் ஆகிய இருவரும் கண்டி வொரியர்ஸ் அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடியிருந்தனர்.
எவ்வாறாயினும், பாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள டி-20 தொடருக்கான, மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் இவர்கள் இருவரும் இடம்பெற்றுள்ள நிலையில், அணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தனர்.
இதன்படி, குறித்த 2 வீரர்களுக்கும் பதிலாக இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் ரவி பொப்பாரா மற்றும் துடுப்பாட்ட வீரர் டொம் மூர்ஸ் ஆகியோர் கண்டி வொரியர்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர் என அந்த அணி நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
டொம் மூர்ஸ் மற்றும் ரவி பொப்பாரா ஆகியோர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ளதுடன், இவர்கள் இருவரும் அடுத்த போட்டிக்கான வீரர்கள் தெரிவிலும் உள்வாங்கப்படுவர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்தவகையில் ரோவ்மன் பவல் பாகிஸ்தான் தொடருக்காக நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இவர் ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 15 பந்துகளில் அரைச்சதம் விளாசியிருந்தார். குறித்த இந்த அரைச்சதமானது, எல்.பி.எல் தொடரில் பெறப்பட்ட இரண்டாவது வேகமான அரைச்சதமாக பதிவாகியிருந்தது.
எல்.பி.எல் தொடரில் கண்டி வொரியர்ஸ் அணி மூன்று போட்டிகளில் விளையாடி, மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இம்முறை எல்.பி.எல் தொடரில் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய நமீபியா நாட்டு டேவிட் வீஸி, தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளார்.