
திசர பெரேரா மற்றும் அவிஷ்க பெர்னாண்டோவின் அதிரடி ஆட்டங்களுடன் புதன்கிழமை இரவு நடைபெற்ற எல்.பி.எல் தொடரில் 7 ஆவது லீக் போட்டியில் கண்டி வொரியர்ஸ் அணியை 14 ஓட்டங்களால் ஜப்னா கிங்ஸ் அணி வீழ்த்தியது.
கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக ஆரம்பத்தில் தடைப்பட்டது. பின்னர் இரவு 9.30 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியானது 14 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
அதன்படி, கண்டி வொரியர்ஸ் அணியின் அழைப்பில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி, 14 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களை எடுத்தது.
அந்த அணி சார்பில் அவிஷ்க பெர்னாண்டோ 53 ஓட்டங்களையும், அணித்தலைவர் திசர பெரேரா 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அத்துடன், 3ஆவது விக்கெட்டுக்காக 33 பந்துகளில் 101 ஓட்டங்களைப் பெற்று டி-20 லீக்கில் குறைந்த பந்துகளில் சத இணைப்பாட்டமொன்று சாதனை படைத்தனர்.
கண்டி அணியின் பந்துவீச்சில் அறிமுக டி-20 போட்டியில் விளையாடிய சிராஸ் அஹ்மட் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து 182 என்ற சவாலான இலக்கை துரத்திய கண்டி வொரியர்ஸ் அணி, 14 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து 14 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய ரோவ்மன் பவல் 15 பந்துகளில் அரைச்சதம் கடந்து எல்.பி.எல் தொடரில் 2ஆவது அதிவேக அரைச்சதத்தைப் பதிவுசெய்ததுடன், 61 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
மறுபுறத்தில் சரித் அசலங்க 42 ஓட்டங்களையும், கெனார் லூவிஸ் 41 ஓட்டங்களையும் எடுத்தனர்.
ஜப்னா அணியின் பந்துவீச்சில் ஜெய்டன் சீல்ஸ் 2 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மால் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் ஜப்னா கிங்ஸ் அணி 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியதுடன், கண்டி வொரியர்ஸ் அணி ஹெட்ரிக் தோல்வியுடன் கடைசி இடத்தைப் பெற்றுக்கொண்டது.