‘லங்கா பிரீமியர் லீக்’ (எல்.பி.எல்) தொடரில் தம்புள்ள ஜயண்ட்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ஜப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
எல்.பி.எல் தொடரில் இன்று பிற்பகல் நடைபெற்ற 4 ஆவது லீக் போட்டியில் ஜப்னா கிங்ஸ் – தம்புள்ள ஜயண்ட்ஸ் அணிகள் மோதின.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி, ஜப்னா கிங்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் ஆரம்பம் முதல் தடுமாறியது. இதனால் அந்த அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களை எடுத்தது.
அந்த அணி சார்பில் இளம் வீரர் நுவனிந்து பெர்னாண்டோ 23 ஓட்டங்களையும், சாமிக்க கருணாரத்ன 18 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
சுரங்க லக்மால் பவர் பிளே ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்த,
ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் சுரங்க லக்மால் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
இதனையடுத்து 111 என்ற இலகுவான இலக்கை துரத்திய ஜப்னா கிங்ஸ் அணி, 12.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 114 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
அந்த அணிக்காக கடந்த காலங்களில் சோபிக்க தவறிய அவிஷ்க பெர்னாண்டோ 33 ஓட்டங்களையும், டொம் கொலெர்-கெட்மோர் 45 ஓட்டங்களையும், சொஹைப் மலிக் 26 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இதன்படி, 8 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டிய ஜப்னா கிங்ஸ் அணி, இம்முறை எல்.பி.எல் தொடரில் முதல் வெற்றியை பதிவுசெய்தது.
அத்துடன், இந்த வெற்றியுடன் ஜப்னா கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.