
Photo: Twitter/BCCI
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக தடவைகள் தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்று சாதனை படைத்தார்.
மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது.
இந்த டெஸ்ட் தொடரில் 42 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன், துடுப்பாட்டத்திலும் சிறப்பான பங்களிப்பினை வழங்கியிருந்தார்.
இதன் காரணமாக தொடர் நாயகன் விருது அஸ்வினுக்கு வழங்கப்பட்டதுடன், டெஸ்ட் போட்டிகளில் 9 ஆவது தடவையாக தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார்.
அத்துடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், அதிக தடவைகள் தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில், இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக அஸ்வின் இரண்டாம் இடத்தில் உள்ளார். முரளிதரன் 11 தடவைகள் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
அதேபோல, சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் மிகக்குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை கடந்த வீரர்கள் பட்டியலில் அஸ்வின் இரண்டாம் இடம் பிடித்தார். அவர் இந்தியாவில் 49 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 300 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
அதுமாத்திரமன்றி, ஒரே ஆண்டில் 4 தடவைகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையையும் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார்.