இந்தியாவின் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திற்கான புதிய போட்டி அட்டவணையை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது.
இந்திய அணி தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 டி-20 போட்டிகளில் விளையாட முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் ஒமிக்ரோன் அச்சுறுத்தலால் இந்திய அணியின் தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் தாமதமாகியது.
எனவே, இந்திய அணி தென்னாபிரிக்கா செல்வது தாமதமானதால், டி-20 தொடரை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் மட்டுமே இந்திய அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, எதிர்வரும் 17ஆம் திகதி முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகுவதாக இருந்த நிலையில், தற்போது முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்கான புதிய போட்டி அட்டவணையை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் எதிர்வரும் 26ஆம்; திகதியும், 2ஆவது டெஸ்ட் போட்டி ஜொஹன்னஸ்பேர்க்கில் ஜனவரி 3ஆம் திகதியும், 3ஆவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 11ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது.
இதனைத்தொடர்ந்து முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளும் முறையே ஜனவரி 19 மற்றும் 21 ஆகிய திகதிகளில் பார்ல் மைதானத்திலும், கடைசி ஒருநாள் போட்டி 23ஆம் திகதி கேப்டவுனிலும் நடைபெறவுள்ளது.