July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடம்

Photo: Twitter/BCCI

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றதையடுத்து தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்தது.

மும்பையில் இந்திய அணிக்குக் கிடைத்த வெற்றியின் மூலம் உள்நாட்டில் தொடர்ந்து 14-வது முறையாக டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

இந்த ஆண்டில் இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி சமநிலையில் முடிந்தது.

இந்திய அணி கடைசியாக 2020ஆம் ஆண்டு மே மாதம் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது. அதன்பின் நியூசிலாந்து அணி அந்த இடத்தைக் கைப்பற்றியது.

இதனிடையே தற்போது சொந்த மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம் நியூசிலாந்திடம் இருந்து மீண்டும் முதலிடத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

டெஸ்ட் தரவரிசையில் தற்போது இந்திய அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து அணி 121 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், அவுஸ்திரேலிய அணி 108 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் இருக்கின்றன.

அத்துடன் இங்கிலாந்து அணி 107 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 5ஆவது இடத்தில் 92 புள்ளிகளுடனும், தென்னாபிரிக்கா 88 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும், இலங்கை அணி 83 புள்ளிகளுடன் 7ஆவது இடத்திலும், 8ஆவது இடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 75 புள்ளிகளுடனும் உள்ளன. பங்களாதேஷ் 9ஆவது இடத்திலும், 49 புள்ளிகளுடனும் 10ஆவது இடத்தில் ஜிம்பாப்வேயும் உள்ளன.