July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் 2021: பில் சோல்ட்டின் அதிரடியில் தம்புள்ள அணிக்கு முதல் வெற்றி

Photo: Twitter/Sri Lanka Cricket

எல்பி.எல் தொடரில் ‘கண்டி வொரியர்ஸ்’ அணிக்கு எதிரான  இரண்டாவது லீக் போட்டியில் ‘தம்புள்ள ஜயண்ட்ஸ்’ அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

இலங்கையின் உள்ளூர் டி-20 லீக் தொடரான ‘லங்கா பிரீமியர் லீக்’ தொடரின் இரண்டாவது சீசன் நேற்று ஆரம்பமாகியது.

இந்த நிலையில், இன்று பிற்பகல் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ‘தம்புள்ள ஜயண்ட்ஸ்’ – ‘கண்டி வொரியர்ஸ்’ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி, பில் சோல்ட், நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக பில் சோல்ட் 64 ஓட்டங்களையும், நிரோஷன் டிக்வெல்ல 37 ஓட்டங்களையும் எடுத்தனர். கண்டி அணி தரப்பில் லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும், அல் அமீன் ஹொசைன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்பின் 191 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கைத் துரத்திய கண்டி வொரியர்ஸ் அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி சார்பில் ரமேஷ் மெண்டிஸ் மற்றும் நுவன் பிரதீப் அகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

இதன்மூலம் தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கண்டி வொரியர்ஸ் அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.