
இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதின்கீழ் பிரிவு 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி அணியை 17 ஓட்டங்களால் வீழ்த்தி காலி வித்தியாலோக கல்லூரி அணி சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டது.
சனிக்கிழமை (04) கொழும்பு நாலந்த கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வித்தியாலோக அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய வித்தியாலோக கல்லூரி அணி, 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அவ்வணியின் துடுப்பாட்டத்தில் கவிந்த 47 பந்துகளில் 53 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
யாழ். மத்திய கல்லூரியின் பந்து வீச்சில் அஜேய் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, கௌதம் மற்றும் கஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
அதன் பின்னர் 211 என்ற சவாலான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி, இறுதி ஓவர் வரை போராடினாலும் 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.
யாழ்.மத்திய கல்லூரியின் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட சன்ஜயன் 55 ஓட்டங்களையும், அஜேய் 45 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
வித்தியாலோக கல்லூரி அணியின் பந்துவீச்சில் சசிந்து, செனித் பிரவீன் மற்றும் உமயங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இறுதியில் 17 ஓட்டங்களால் வெற்றியீட்டிய வித்தியாலோக கல்லூரி அணி, பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதின்கீழ் பிரிவு 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றது.
இதனிடையே, பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதின் கீழ் பிரிவு 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரில் யாழ். மத்திய கல்லூரி அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.