July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் 2021: ஜப்னா கிங்ஸை இலகுவாக வீழ்த்தியது கோல் கிளேடியேட்டர்ஸ்

Photo: Twitter/Sri Lanka Cricket 

எல்.பி.எல் தொடரின் முதலாவது போட்டியில் நடப்புச் சம்பியனான ஜப்னா கிங்ஸ் அணியை 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி வீழ்த்தியது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணியின் தலைவர் திசர பெரேரா முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார். 

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி சார்பில் பானுக ராஜபக்ஸவின் வேகமான அரைச்சதத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை எடுத்தது.

பானுக ராஜபக்ஸ அதிகபட்சமாக 31 பந்துகளில் 56 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க, சமித் படேல் 42 ஓட்டங்களை எடுத்தார்.

ஜப்னா கிங்ஸ் அணியின் பந்து வீச்சில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் வனிந்து ஹஸரங்க தன்னுடைய 100 ஆவது டி-20 விக்கெட்டையும் பதிவு செய்திருந்தார்.

பின்னர் 165 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஜப்னா கிங்ஸ் அணி ஆரம்பம் முதல் விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.

ஜப்னா கிங்ஸ் அணியின் எந்தவொரு முதன்மை துடுப்பாட்ட வீரர்களும் சிறந்த ஓட்ட எண்ணிக்கைக்கு செல்லாத நிலையில், அந்த அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 110 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது

ஜப்னா கிங்ஸ் அணி சார்பில், அதிகபட்சமாக வஹாப் ரியாஸ் 27 ஓட்டங்களையும், உபுல் தரங்க 17 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டதுடன், சமித் படேல் 3 விக்கெட்டுகளையும், புலின தரங்க மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

எனவே, இம்முறை எல்.பி.எல் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற கோல் கிளேடியேட்டர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

இதனிடையே, கோல் கிளேடியேட்டர்ஸ் அணி திங்கட்கிழமை (06) கொழும்பு ஸ்டார்ஸ் அணியையும், தம்புள்ள ஜியண்ட்ஸ் அணி, கண்டி வொரியர்ஸ் அணியையும் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.