November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து வீரர் உலக சாதனை

Photo: Twitter/BCCI

மும்பை டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையேயான 2 ஆவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று (03) ஆரம்பமாகியது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஆரம்ப வீரர் மயங்க் அகர்வால் 120 ஓட்டங்களுடனும், சஹா 25 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று போட்டியின் 2 ஆம் நாள் ஆட்டம் ஆரம்பமாகிய சில நிமிடங்களில் சஹா 27 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஸ்வின் முதல் பந்திலேயே ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஏமாற்றமளித்தார்.

எனினும், மயங்க அகர்வால் பெற்றுக் கொண்ட 150 ஓட்டங்களுடன் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ஓட்டங்களை எடுத்தது.

நியூசிலாந்து தரப்பில் அந்த அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் 47.5 ஓவர்கள் பந்துவீசி 119 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உலக சாதனை படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஒரே இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் 10 பேரின் விக்கெட்டுக்களையும் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை அஜாஸ் படேல் பெற்றார்.

இதற்கு முன்னதாக இரண்டு வீரர்கள் மட்டுமே ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் என்ற சாதனையை படைத்திருந்தனர்.

அதன்படி, 1956 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் வலதுகை சுழல் பந்து வீச்சாளர் ஜிம் லெகர் 53 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தார்.

ஜிம் லெகருக்கு அடுத்தபடியாக 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய சுழல் பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே 76 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

தற்போது, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஜிம் லெகர், அனில் கும்ப்ளே இடம்பெற்றுள்ள சாதனைப் பட்டியலில் 3 ஆவது நபராக நியூசிலாந்து அஜாஸ் படேல் இணைந்துள்ளார்.