July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘லங்கா பிரீமியர் லீக்’ தொடர் டிசம்பர் 5 ஆரம்பம்

Photo: Twitter/ Sri Lanka Cricket

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லங்கா பிரீமியர் லீக்  எனப்படுகின்ற எல்.பி.எல் தொடர் நாளை (டிசம்பர் 5) கொழும்பு ஆர். பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

உலகின் பிரபலமான கிரிக்கெட் வீரர்களும், உள்ளூர் நட்சத்திர வீரர்களும் பங்குபற்றவுள்ள இம்முறை எல்.பி.எல் தொடரானது நாளை முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளன.

இதில் முதல் சுற்று லீக் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்திலும், பிளே-ஒப் சுற்றுப் போட்டிகள் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

இதனிடையே, இம்முறை போட்டித் தொடரில் ஜப்னா கிங்ஸ், கோல் கிளேடியேட்டர்ஸ், கொழும்பு ஸ்டார்ஸ், தம்புள்ள ஜியண்ட்ஸ் மற்றும் கண்டி வொரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்கவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், இம்முறை எல்.பி.எல் தொடரில் சம்பியனாகும் அணிக்கு 20 மில்லியன் ரூபா பணப்பரிசும், இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொள்ளும் அணிக்கு 10 மில்லியன் ரூபா பணப்பரிசும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட ரசிகர்களை மைதானத்தில் அனுமதிக்கவும் இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, 50 சதவீத ரசிகர்களை மைதானத்தில் அனுமதிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஒமிக்ரோன் வைரஸ் பரவல் காரணமாக தென்னாபிரிக்க வீரர்கள் இம்முறை எல்.பி.எல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருசில முன்னணி வீரர்கள் இம்முறை எல்.பி.எல் தொடரில் களமிறங்கவுள்ளார்கள்.

இதனிடையே, நாளை மாலை 6.00 மணிக்கு தொடக்க விழா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன். ஆதனைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஜப்னா கிங்ஸ் மற்றும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிகள் இடையிலான முதலாவது போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.