
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் புதிய 2 அணிகளை சேர்த்து 10 அணிகள் விளையாட உள்ளதுடன், இதற்கான வீரர்கள் ஏலத்தை விரைவில் நடத்துவதற்கும் பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் இம்முறை வீரர்கள் ஏலத்தில் பாகிஸ்தான் அணி வீரர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசியல் முரண்பாடு காரணமாக 2013 முதல் பாகிஸ்தானுடன் இந்தியா இருத்தரப்பு தொடர்களில் விளையாடவில்லை. இதனால் ஐ.சி.சியினால் நடத்தப்படுகின்ற தொடரில் மோதும் போது பாகிஸ்தானை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் திணறுகின்றனர்
மேலும் பாகிஸ்தான் வீரர்கள் டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதால், அவர்களை ஐ.பி.எல். தொடரில் அனுமதித்தால், ஐ.பி.எல். தொடர் இன்னும் பிரபல்யமடையும் என்று கிரிக்கெட் விமர்கர்கள் மற்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதில் டி-20 போட்டிகளின் பிராட்மேன் என்று அழைக்கப்படுகின்ற பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாமை ஏலத்தில் எடுக்க, 10 அணிகளும் கடுமையாக போட்டி போடும்.
அதேபோல, டி-20 போட்டிகளில் நடப்பாண்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள மொஹமட் ரிஸ்வான், அதிக விலைக்கு போகும் வீரராக திகழ்வார்.
இதுஇவ்வாறிருக்க, அண்மையில் நிறைவுக்கு வந்த டி-20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சு எனலாம்.
அதிலும், குறிப்பாக சஹீன் அப்ரிடியின் வேகப் பந்துவீச்சை எதிர்கொள்ள அனைத்து அணி வீரர்களுமே தயங்குவார்கள்.
அந்த வரிசையில், ஆசிப் அலி, சதாப் கான், பக்கர் ஸமான், மொஹமட் ஹபீஸ் போன்ற வீரர்களுக்கு ஐ.பி.எல். தொடரில் அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு ஐ.பி.எல் தொடரில் விளையாட அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பி.சி.சி.ஐ ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.