January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் மூலம் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பும் இலங்கை வீரர்கள்

கொவிட்-19 வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்ட தனுஷ்க குணத்திலக்க, நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகிய மூன்று வீரர்களுக்கும் எல்.பி.எல் தொடரில் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி, கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது தனுஷ்க குணத்திலக்க, நிரோஷன் டிக்வெல்ல, மற்றும் குசல் மெண்டிஸ் ஆகிய மூவரும் கொவிட்-19 கட்டுப்பாட்டு வலயத்தை மீறி வெளியில் சென்றார்கள் என்ற குற்றச்சாட்டில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இந்த மூன்று வீரர்களையும் விசாரித்த குழு வழங்கியிருந்த இறுதி அறிக்கைக்கு அமைய தனுஷ்க குணத்திலக்கவிற்கு இரண்டு ஆண்டுகள் போட்டித்தடையும், நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு ஒன்றரை ஆண்டு போட்டித்தடையும், 25,000 அமெரிக்க டொலர்கள் வரையிலான அபராதமும் விதிக்கப்படும் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

எனினும் கடந்த ஜூன் தொடக்கம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்ட இந்த வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் நிர்வாகம் ஆறு மாத காலம் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கான தடையினையும், ஓராண்டிற்கான சர்வதேச போட்டித் 3தடையினையும் வழங்கியதோடு, இரண்டு ஆண்டுகளுக்கான ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தடையுடன்  10 மில்லியனை அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அத்துடன், குறித்த வீரர்கள் மூவரும் இலங்கை கிரிக்கெட் சபை பரிந்துரைக்கும் மருத்துவர் ஒருவரிடம் கட்டாயமான உளநல ஆலோசனைகளை பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் இந்த வீரர்களுக்கான உளநல மருத்துவர் வழங்கிய பரிந்துரைக்கு அமைய இந்த வீரர்களுக்கான உள்ளூர் போட்டித்தடை கடந்த நவம்பர் மாதம் நீக்கப்பட்டிருந்தது.

எனினும் தடை நீக்கப்பட்ட பின்னர் இந்த மூன்று வீரர்களும், தற்போது நிறைவடைந்த உள்ளூர் கழகங்களுக்கிடையிலாள ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றிருக்கவில்லை.

ஆனால், இந்த வீரர்கள் மூவரும் இம்மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகும் லங்கா எல்.பி.எல் தொடரின் மூலம் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஆண்டு எல்.பி.எல் தொடரில் தனுஷ்க குணத்திலக்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்காகவும், நிரோஷன் டிக்வெல்ல தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.