July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்னாபிரிக்க சுற்றுப்பயணம்: மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் பி.சி.சி.ஐ

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்வது குறித்து மத்திய அரசின் அனுமதிக்காக இந்திய கிரிக்கெட் சபை காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, எதிர்வரும் 8 ஆம் திகதி தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி- 20 தொடர்களில் விளையாட உள்ளது.

இந்த நிலையில், தென்னாபிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வீரியமிக்க ஒமிக்ரோன் எனப்படுகின்ற கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறன் குறைவு என சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. எனினும், தென்னாபிரிக்காவில் வேகமாக பரவி வருகின்ற ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் காரணமாக இந்திய அணியின் தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடக்குமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவிக்கையில்,

இந்திய அணியின் தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் இரத்து செய்யப்பட எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. அந்தத் தொடர் குறித்து முடிவெடுக்க இன்னும் கால அவகாசம் உள்ளது. எனவே காத்திருந்து பின்னர் முடிவு எடுக்கப்படும். எதிர்வரும் டிசம்பர் 17 ஆம் திகதி முதல் டெஸ்ட் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தான் தற்போதைக்கு இடம்பெற்று வருகிறது.

குறிப்பாக, வீரர்களின் பாதுகாப்பு தான் பி.சி.சி.ஐ.யின் முதன்மையான விடயமாக இருக்கும். எனவே அவர்களின் பாதுகாப்புக்காக பி.சி.சி.ஐ.யால் என்ன செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் தாமதமின்றி செய்வோம். இந்திய அணி தென்னாபிரிக்காவுக்கு செல்ல இன்னும் சில நாட்கள் மீதமுள்ளன. எனவே நிதானமாக காத்திருப்போம் என கங்குலி கூறியுள்ளார்.

இதேவேளை, பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் துமால் கூறுகையில்,

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை இந்த அச்சுறுத்தலை சமாளிக்கும்போது ,நாங்கள் அவர்களுடன் துணை நிற்கிறோம். வீரர்களின் பாதுகாப்பில் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம். தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். எவ்வாறாயினும், இந்திய அரசின் ஆலோசனை எதுவாக இருந்தாலும், நாங்கள் அதைக் கடைப்பிடிப்போம் என்று கூறினார்.

எவ்வாறாயினும், இந்தத் தொடர் குறித்து எதிர்வரும் 48 மணி நேரத்தில் பி.சி.சி.ஐ இறுதி முடிவு எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.