மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக தற்போது நடைபெற்று வருகின்ற டெஸ்ட் தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, ஐ.சி.சி.யின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 7 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இலங்கை – மேற்கிந்திய தீவுகள், இந்தியா – நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிகள் என்பன நிறைவுக்கு வந்துள்ள நிலையில், வீரர்களுக்கான புதிய தரப்படுத்தலை ஐ.சி.சி இன்று (01) வெளியிட்டுள்ளது.
ஐ.சி.சி.யினால் வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசையின் படி, இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 7 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன் டெஸ்ட் தரவரிசையில் 11 ஆவது இடத்தில் இருந்த திமுத், முதல் டெஸ்ட் போட்டியில் பெற்றுக் கொண்ட சதம் மற்றும் அரைச்சதம் என்பவற்றின் காரணமாக 4 இடங்கள் முன்னேறி 7 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, ஐ.சி.சி.யினால் வெளியிடப்பட்டுள்ள துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 903 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஒரு இடம் முன்னேறி இரண்டாவது இடத்தையும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஒரு இடம் சரிந்து மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.