அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெறவுள்ளதால், ஒவ்வொரு அணிகளிலும் தக்கவைக்கப்படவுள்ள வீரர்களின் பெயர் பட்டியல் வெளியாகியது.
இதன்படி, 8 அணிகளாலும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளதால் இதன்பிறகு எஞ்சியுள்ள வீரர்களில் இருந்து இரு புதிய அணிகளும் தலா மூன்று வீரர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். இந்தப் பணி டிசம்பர் 25ஆம் திகதிக்குள் முடிவடையவேண்டும்.
இதனிடையே, நான்கு வீரர்களை மட்டும் தக்கவைக்க வேண்டும் என்பதால் பல பிரபல வீரர்களைத் தக்கவைக்க முடியாத நிலை அணிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
2018ஆம் அண்டிலிருந்து தலைவராக இருந்து பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தியதுடன், மிகச்சிறப்பாக விளையாடி ஓட்டங்களை எடுத்த கேஎல் ராகுலை பஞ்சாப் கிங்ஸ் அணி விடுவித்துள்ளது. அதேபோல டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைவராக இருந்துவந்த ஸ்ரேயாஸ் அய்யரை அந்த அணி விடுவித்துள்ளது.
அதேபோல, 2016 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தவரும், அண்மையில் நிறைவடைந்த டி-20 உலகக் கிண்ணத்தில் தொடர் நாயகன் விருது வென்றவருமான டேவிட் வோர்னரை அந்த அணி விடுவித்துள்ளது. அத்துடன், அந்த அணியின் முன்னணி வீரராக ஜொலித்துவந்த ரஷித் கானையும் சன்ரைசர்ஸ் அணி விடுவித்துள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2ஆம் இடம்பிடித்த தென்னாபிரிக்கா வீரர் பாப் டு பிளெசிஸ், மேற்கிந்திய தீவுகளின் டுவைன் பிராவோ, சுரேஷ் ரெய்னா, ரொபின் உத்தப்பா, தீபக் சஹார், ஷர்துல் தாக்குர், அவுஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசில்வுட் ஆகிய முக்கிய வீரர்களை சென்னை அணியால் தக்கவைக்க முடியவில்லை.
இவர்கள் தவிர, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், யுஸ்வேந்திர சஹால், ரவிச்சந்திரன் அஸ்வின், பென் ஸ்டோக்ஸ், மொஹமட் ஷமி, ஜொனி பேர்ஸ்டோ, ஸ்டீவ் ஸ்மித், கங்கிசோ ரபாடா, ஆகிய பெரிய வீரர்கள் அந்தந்த அணிகளால் கழட்டிவிடப்பட்டுள்ளன. எனவே, ஐ.பி.எல் அணிகள் தக்கவைக்காத பிரபல வீரர்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
சென்னை: பாப் டு பிளெசிஸ், டுவைன் பிராவோ, சுரேஷ் ரெய்னா, ரொபின் உத்தப்பா, தீபக் சஹார், ஷர்துல் தாக்குர், ஜோஸ் ஹேசில்வுட்
கொல்கத்தா: ஒயின் மோர்கன், சுப்மன் கில், லுக்கி பெர்குசன், நிதிஷ் ராணா
பெங்களூர்: தேவ்தத் படிக்கல், யுஸ்வேந்திர சஹால், ஹர்ஷல் படேல், வொஷிங்டன் சுந்தர்
டெல்லி: ஸ்ரேயாஸ் அய்யர், ரவிச்சந்திரன் அஸ்வின், அவேஷ் கான், கங்கிஸோ ரபாடா
மும்பை: ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், டிரென்ட் போல்ட், ராகுல் சஹார்
ஹைதராபாத்: டேவிட் வோர்னர், ரஷித் கான், ஜொனி பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே
ராஜஸ்தான்: பென் ஸ்டோக்ஸ், ஜொப்ரா ஆர்ச்சர், டேவிட் மில்லர், கிறிஸ் மொரிஸ், லியெம் லிவிங்ஸ்டன்
பஞ்சாப்: கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல், ரவி பிஷ்னோய், நிகொலஸ் பூரான், ஷாருக் கான்