May 29, 2025 18:40:19

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“எல்.பி.எல் இல் களமிறங்க மாட்டேன்”; ரோஹித ராஜபக்‌ஸ திட்டவட்டம்

இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள எல்.பி.எல் தொடரில் தம்புள்ள ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடவுள்ளதாக வெளியான செய்திகள் உண்மையல்ல என பிரதமர் மகிந்த ராஜபக்‌ஸவின் இளைய மகன் ரோஹித ராஜபக்‌ஸ தெரிவித்துள்ளார்.

எல்.பி.எல் தொடரின் இரண்டாவது சீசன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், இம்முறை எல்.பி.எல் தொடரில் புதிய பெயருடன் களமிறங்கும் தம்புள்ள ஜெயன்ட்ஸ் அணி வீரர்கள் தமது பயிற்சி முகாம்களில் பங்குபற்றி வருகின்றனர்.

இதில் தம்புள்ள அணி வீரர்கள் நேற்று (30) பங்குபற்றிய பயிற்சிப் போட்டியில் ரோஹித ராஜபக்‌ஸ கலந்துகொண்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

அதுமாத்திரமின்றி, ரோஹித ராஜபக்‌ஸ தம்புள்ள ஜெயன்ட்ஸ் அணியின் ஜேர்சியை அணிந்து கொண்டிருந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

இதனிடையே, இந்த ஆண்டு எல்.பி.எல் தொடரில் தம்புள்ள அணிக்காக விளையாடுவது பற்றி வெளியாகிய செய்தியை தான் மறுப்பதாகவும், தான் அந்த அணிக்காக நேற்று பயிற்சிப் போட்டிகளில் விளையாடவில்லை எனவும் தனியார் வானொலி ஒன்றுக்கு அளித்த செவ்வியில், ரோஹித ராஜபக்‌ஸ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு எல்.பி.எல் தொடரில் தம்புள்ள ஜெயன்ட்ஸ் அணியின் உத்தியோகபூர்வ பாடலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கமைய அந்தப் பாடல் தொடர்பான ஒளிப்பதிவு நேற்றைய தினம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, இலங்கையின் உள்ளூர் கழகங்களில் ஒன்றான களுத்துறை நகர கிரிக்கெட் கழகத்துக்காக ரோஹித ராஜபக்‌ஸ விளையாடவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், அது தொடர்பிலான செய்தியை ஆரம்பத்தில் மறுத்திருந்த ரோஹித ராஜபக்‌ஸ, பிறகு அந்த அணிக்காக 3 போட்டிகளில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.