January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“பிளே-ஓப்” சுற்றுக்கு முன்னேறுமா பெங்களூர்? மும்பையை எதிர்கொள்கிறது இன்று

(Photo:BCCI/IPL)

இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை, பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி, 8 ஆவது வெற்றியை பதிவு செய்து, ‘பிளே-ஓப்’ சுற்றுக்கு செல்லும்.

இன்று அபுதாபியில் நடக்கும் லீக் போட்டியில் விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி, ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணியை எதிர்கொள்கிறது.

இத்தொடரில் இந்த இரு அணிகள் துபாயில் மோதிய போட்டி ‘டை’ ஆனது. பின், ‘சூப்பர் ஓவரில்’ பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

இரு அணிகளும் 11 போட்டியில், 7 வெற்றி, 4 தோல்வி என, தலா 14 புள்ளிகளுடன் உள்ளன. இன்று 8 ஆவது வெற்றி பெறும் அணி 16 புள்ளிகளுடன் ‘பிளே- ஓப்’ சுற்றுக்கு முன்னேறும்.

ரோஹித் சந்தேகம்:

தொடையின் பின்பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் கடந்த இரு போட்டிகளில் பங்கேற்காத ரெகுலர்’ கேப்டன் ரோஹித் சர்மா, வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இருப்பினும் இன்றும் இவர் பங்கேற்பது சந்தேகம் தான்.

Photo:BCCI/IPL

இதனால் போலார்டு கேப்டனாக தொடரலாம். பேட்டிங்கில் குயின்டன் டி காக் (374 ரன்கள்), இஷான் கிஷான் (298), சூர்யகுமார் யாதவ் (283) நம்பிக்கை தருகின்றனர்.

ராஜஸ்தானுக்கு எதிராக 21 பந்தில் 60 ரன் விளாசிய ஹர்திக் பாண்ட்யா (224), மீண்டும் கைகொடுக்கலாம்.

பின்வரிசையில் போலார்டு (214), குர்னால் பாண்ட்யா (85) அசத்தினால் நல்ல ஸ்கோரை பெறலாம்.

எழுச்சி பெறுமா?:

ராஜஸ்தானுக்கு எதிராக ஏமாற்றிய மும்பை  பந்துவீச்சாளர்கள் இன்று எழுச்சி பெற வேண்டும். வேகப்பந்துவீச்சில் பும்ரா (17 விக்.,), டிரண்ட் பவுல்ட் (16) அசத்துகின்றனர்.

மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக பட்டின்சன் (11) அல்லது கூல்டர் நைல் (2) தேர்வாகலாம். ‘சுழலில்’ ராகுல் சகார் (13 விக்கெட்) நம்பிக்கையளிக்கிறார்.

கோஹ்லி நம்பிக்கை:

சென்னை அணியிடம் வீழ்ந்த சோகத்தில் உள்ள பெங்களூர் அணிக்கு பேட்டிங்கில் கேப்டன் விராத் கோஹ்லி (415 ரன்) பலம் சேர்க்கிறார்.

இவருக்கு, தேவ்தத் படிக்கல் (343), ஆரோன் பின்ச் (236), டிவிலியர்ஸ் (324) ஒத்துழைப்பு தந்தால் வலுவான ஸ்கோரை பெறலாம்.

வேகத்தில் கிறிஸ் மோரிஸ் (10 விக்கெட்) மிரட்டுகிறார். காயம் காரணமாக நவ்தீப் சைனி இன்று பங்கேற்பது சந்தேகம். முகமது சிராஜ் (6) ஆறுதல் தருகிறார்.

‘சுழலில்’ யுவேந்திர சகால் (16) நம்பிக்கையளிக்கிறார். இவருக்கு வாஷிங்டன் சுந்தர் ஒத்துழைப்பு தர வேண்டும்.