January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் விதிமுறை மீறல்: கேஎல் ராகுல், ரஷித் கானுக்கு ஓராண்டு தடை வரலாம்!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் இருந்து கே.எல்.ராகுல் மற்றும் ரஷித் கான் ஆகிய இருவரும் தடை செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

2022 ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கு தக்கவைக்கப்படும் வீரர்களை தேர்வு செய்வதில் அனைத்து அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், ஒவ்வொரு அணியில் இருக்கும் வீரர்களும், தங்களுக்கு அந்த அணியில் நீடிக்க விரும்பவில்லை என்றால் வெளியேறிக்கொள்ளலாம்.

அந்தவகையில் இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளில் கேஎல் ராகுல் மற்றும் ரஷpத் கான் ஆகியோரை தக்கவைக்க நிர்வாகங்கள் முடிவெடுத்தும், அவர்கள் அந்த அணியில் நீடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதற்குக் காரணம் புதிதாக வந்துள்ள லக்னோ அணி தான் என கூறப்படுகிறது.

அதாவது குறித்த இரண்டு வீரர்களையும் அதிக பணம் தருவதாகத் தெரிவித்து தமது அணிக்காக ஒப்பந்தம் செய்துகொள்ள முயற்சிப்பதாக லக்னோ அணி மீது பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணியானது கேஎல் ராகுலை முதன்மை வீரராக தக்கவைத்து 16 கோடி ரூபா ஊதியமாக கொடுக்க திட்டமிட்டது. ஆனால் அந்த அணியில் இருக்க விரும்பாத ராகுல், லக்னோ அணியுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவருக்கு 20 கோடி ரூபா ஊதியம் பேசப்பட்டுள்ளது.

அதேபோல ஹைதராபாத் அணி தமது முதன்மை தேர்வாக கேன் வில்லியம்சனை ரூ.16 கோடிக்கும், 2 ஆவது வீரராக ரஷித் கானை 12 கோடி ரூபாவுக்கும் தக்கவைக்கவிருந்தது. ஆனால் ரஷித் கான் தனக்கு 16 கோடி ரூபா தான் ஊதியம் வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார். இதற்குக் காரணம் லக்னோ அணி 16 கோடி ரூபா தருவதாக கூறியது தான்.

இதனால் தான் லக்னோ அணி மீது பிசிசிஐ-க்கு புகார் சென்றுள்ளது. வீரர்களின் ஓப்பந்த காலம் (அக்.30) முடிவதற்கு முன்னதாகவே வேறு ஒரு அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பிசிசிஐ விதிமுறைபடி தவறு. எனவே இந்த தவறு நிரூபிக்கப்பட்டால் லக்னோ அணி மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்.

இதேபோல கேஎல் .ராகுல் மற்றும் ரஷித் கான் ஆகியோருக்கும் தண்டனை வழங்குவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு வீரர் ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பே வேறு ஒரு அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் ஓராண்டிற்கு தடை செய்யப்படுவார்.

இதற்கு முன்னர் கடந்த 2010ஆம் ஆண்டு ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணியில் இருந்த போதே, வேறு அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் அவர் ஓராண்டு தடை செய்யப்பட்டார். அந்த வகையில் கேஎல் ராகுல் மற்றும் ரஷித் கான் ஆகியோரும் தடை செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.