July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இந்தியாவில் நிறவெறி பாகுபாடு”; முன்னாள் தமிழக வீரர் குற்றச்சாட்டு

சொந்த நாட்டிலேயே நிறவெறி பாகுபாட்டினால், தான் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானதாக முன்னாள் இந்திய சுழல் பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

கிரிக்கெட் அரங்கில் கடந்த சில மாதங்களாகவே நிறவெறி குறித்த புகார்கள் அதிகரித்து வருகின்றன. இங்கிலாந்தில், யோர்க்ஷெயார் கழகத்துக்காக விளையாடிய போது தான் நிறவெறியுடன் நடத்தப்பட்டதாக அஸீம் ரபீக் என்ற வீரர் புகார் அளித்திருந்தமை மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த கழகத்துக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை தடை விதித்தது. அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளையும் அங்கு நடத்த தடையும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்திய அணிக்காக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஆரம்ப வீரர் அபினவ் முகுந்த் நிறவெறி குறித்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இது தொடர்பாக அவர் டுவீட் ஒன்றை  பதிவிட்டிருந்தார். அதில், நான் 15 வயது முதலே உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். எனது நிறம் குறித்து பலரும் பேசுவர். அதெல்லாம் எனக்கு வியப்பாக இருக்கும், புரியாத புதிராக இருக்கும். கிரிக்கெட்டை அறிந்தோருக்கு இந்தப் பிரச்சினையும் புரிந்திருக்கும்.

பயிற்சிக்காகவும், விளையாட்டுக்காகவும் வெயிலில் நான் காய்ந்திருக்கிறேன். ஒரு முறை கூட எனது நிறத்துக்காக நான் வருத்தப்பட்டதே இல்லை. கறுத்துவிட்டேனே என்று வருத்தப்பட்டதும் கிடையாது. இந்த விளையாட்டை நான் நேசிக்கிறேன். என்னால் இதில் ஏதாவது சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. இதனால் வெளியில் போய் விளையாடுவதை நான் தவிர்த்ததில்லை. அதை விட முக்கியமாக வெயிலுக்குப் பெயர் போன சென்னையைச் சேர்ந்தவன் நான். எனவே எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் வெளி மைதானங்களில்தான் கழிந்தது என்று கூறியிருந்தார்.

இது இவ்வாறிருக்க, இவ்வாறானதொரு பதிலை இந்தியாவின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் சிவா என்றழைக்கப்படுகின்ற சிவராம கிருஷ்ணனும் தெரிவித்துள்ளார்.

நிறவெறி சர்ச்சை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், எனது வாழ்க்கை முழுவதும் நான் எனது நிறத்திற்காக விமர்சிக்கப்பட்டுள்ளேன். வீரராக மட்டுமல்லாமல், வர்ணணையாளராகவும் நான் இதை சந்தித்துள்ளேன். எனவே இதைப் பற்றி பெரிதாக கவலைப்பட எதுவும் இல்லை. இதை நான் பொருட்படுத்துவதே இல்லை. என்ன கொடுமை என்றால் நம்ம நாட்டிலேயே இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் என்று அவர் தெரிவித்துள்ளார்.