July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் 2021: ‘கொழும்பு ஸ்டார்ஸ்’ அணியில் 7 இலங்கை வீரர்கள் சேர்ப்பு

இலங்கையில் நடைபெறவுள்ள எல்.பி.எல் கிரக்கெட் தொடரில் புதிய பெயருடன் களமிறங்கும் கொழும்பு ஸ்டார்ஸ் அணியில் இலங்கை அணியின் பிரபல வீரர்கள் ஏழு பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு எல்.பி.எல் தொடரின் வீரர்கள் ஏலம் நவம்பர் 9ஆம் திகதி நடைபெற்றது. இதில் இலங்கை அணிக்காக விளையாடி வருகின்ற முன்னணி 10 வீரர்கள் எந்தவொரு அணியாலும் வாங்கப்படவில்லை.

இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் சபையின் தலையீட்டினால் குறித்த 10 வீரர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என ஒவ்வொரு அணி உரிமையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.

இதன்பிரதிபலனாக இலங்கையின் தலைநகரான கொழும்பை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை எல்.பி.எல் தொடரில் களமிறங்கும் கொழும்பு ஸ்டார்ஸ் அணியில் 6 வீரர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், தனன்ஜய டி சில்வா, குசல் பெரேரா, அகில தனன்ஜய, அஷான் பிரியன்ஜன் மற்றும் ஷிரான் பெர்னாண்டோ ஆகிய வீரர்கள் கொழும்பு ஸ்டார்ஸ் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அஞ்சலோ மெத்யூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முதல் சீசனில் கொழும்பு கிங்ஸ் அணியை வழிநடத்தியிருந்தார்.

இதனிடையே, இலங்கையின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ருவன் கல்பகே கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டிருந்த 10 பேர் கொண்ட அணியில் 7 வீரர்களை கொழும்பு ஸ்டார்ஸ் அணியும், பிரவீன் ஜயவிக்ரமவை ஜப்னா கிங்ஸ் அணியும், மினோத் பானுகவை கண்டி வொரியர்ஸ் அணியும் உள்வாங்கியுள்ளது.

எஞ்சிய ஒரேயொரு வீரரான சதீர சமரவிக்ரமவை வாங்க இதுவரை எந்தவொரு அணியும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.