January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறந்த கால்பந்து வீரருக்கான ‘பெலன் டி ஓர்’ விருதை வென்றார் மெஸ்ஸி

Photo: Twitter/Messi

கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘பெலன் டி ஓர்’ விருதை 7 ஆவது முறையாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றார்.

இதன்மூலம் ‘பெலன் டி ஓர்’ விருதை அதிக தடவைகள் வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக் கொண்டார்.

பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் France Football என்ற பத்திரிகை சார்பில் 1956 முதல் ஆண்டுதோறும் ‘பெலன் டி ஓர்’ விருது வழங்கப்படுகிறது. பல்வேறு தரப்பினரிடம் நடத்தப்படும் வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விருதுக்குரியவர் தேர்வு செய்யப்படுகிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த விருது வழங்கப்படவில்லை. இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கோபா அமெரிக்க கிண்ண கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணியை வழிநடத்திய மெஸ்ஸி முதல் முறையாக அந்த அணிக்கு சம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்தார். அத்துடன், அந்த சீசனில் 613 புள்ளிகள் பெற்று மெஸ்ஸி முதலிடத்தைப் பிடித்ததையடுத்து, அவருக்கு ‘பெலன் டி ஓர்’ விருது வழங்கப்பட்டது.

இதற்கு முன் மெஸ்ஸி கடந்த 2009, 2010, 2011, 2012, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் ‘பெலன் டி ஓர்’ விருதை வென்றுள்ளார்.

இந்த விருது வென்றபின் லயோனல் மெஸ்ஸி அளித்த பேட்டியில், ‘நான் மிகுந்த மகிழ்ச்சியில் இங்கு நிற்கிறேன். புதிய சம்பியன் பட்டங்களை வெல்ல தொடர்ந்து போராடுவேன். இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடப் போகிறேன் எனத் தெரியாது. இன்னும் அதிகமாக விளையாடுவேன் என நம்புகிறேன். என்னுடைய சக வீரர்களான பார்சிலோனா, அர்ஜென்டினா வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்’ எனக் குறிப்பிட்டார்.

இதனிடையே, ஆடவர் பிரிவில் 2 ஆவது இடத்தை 580 புள்ளிகளுடன் பேயர்ன் முன்சி அணியின் போலந்து நாட்டு வீரர் ரொபர்ட் லெவான்டோவ்ஸ்கி பெற்றார். செல்ஸி அணியின் ஜோர்ஹின்ஹோ 460 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தைப் பிடித்தார்.

இதேவேளை மகளிர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை அலெக்சியா புடிலா ‘பெலன் டி ஓர்’ விருதைக் கைப்பற்றினார்.