January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கான்பூர் டெஸ்ட்: ஒரு விக்கெட்டினால் வெற்றியை தவறவிட்ட இந்தியா

இந்தியா நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதல் போட்டி கான்பூரில் 25ஆம் திகதி ஆரம்பமாகியது.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 345 ஓட்டங்களை எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 105 ஓட்டங்களையும், சுப்மன் கில் 52 ஓட்டங்களையும் எடுத்தனர்.

அதன்பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களை எடுத்தது.

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டொம் லதம் 95 ஓட்டங்களையும், வில் யங் 89 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இதனையடுத்து 49 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 234 ஓட்டங்களை எடுத்த போது டிக்ளேர் செய்து, இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 65 ஓட்டங்களையும், விருத்திமன் சஹா 61 ஓட்டங்களையு எடுத்தனர்.

இதன்படி, 284 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் ஆரம்ப வீரரான வில் யங் 2 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு ஆரம்ப வீரரான டொம் லதம் 52 ஓட்டங்கள் எடுத்து வலுச்சேர்த்தார்.

தொடர்ந்து வந்த வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது.

எனவே, இந்திய அணியின் கைவசம் 10 ஓவர்களுக்கு மேல் இருந்ததாலும், இந்திய அணி இந்தப் போட்டியில் இலகுவாக வெற்றி பெறும் என்றே கருதப்பட்டது

ஆனால், களத்தில் இருந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் அஜாஸ் பட்டேல் இறுதி பந்து வரை நிலைத்து நின்று விளையாடியதால் இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுக்களையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.