2022 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் பங்கேற்பதற்காக சிம்பாப்வே சென்றுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதற்காக விசேட விமானம் ஒன்றை அங்கு அனுப்புவதற்கும், அது தொடர்பில் விமான சேவை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையும் தமக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்வந்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போது வரை இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாத்தில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அணியில் உள்ள 6 வீராங்கனைகளுக்கும், பெண் அதிகாரியொருவருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனிடையே, இலங்கை அணியில் உள்ள 7 பேரும் தற்போது தென்னாபிரிக்க உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகின்ற ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்படவில்லை எனவும் கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 7 பேரைத் தவிர ஏனையோரை உடனடியாக நாட்டிற்கு அழைத்துவர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.