July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் 2022: மும்பை இந்தியன்ஸ் அணியில் தக்கவைக்கப்படவுள்ள நான்கு வீரர்கள்

அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, இஷான் கிஷன், கிரென் பொல்லார்ட் ஆகிய வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் தக்கவைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் தொடரில் 5 முறை சம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த சீசனில் பிளே ஓப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அணியின் முக்கிய வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா என அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் எவரும் பிரகாசிக்கத் தவறியதால் அந்த அணி தோல்விகளை சந்தித்தது.

எனவே, கடந்த சீசனில் எதிர்கொண்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்தாண்டு ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கவுள்ளது. இதன்படி, விரைவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் மெகா ஏலத்தின் போது மும்பை அணி அதிரடி முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, அடுத்த ஆண்டு முதல் புதிதாக அகமதாபாத், லக்னோ ஆகிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கவுள்ளதால் போட்டிகள் கடுமையாக இருக்கும் என தெரிகிறது.

இந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். அதாவது 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது 2 அயல்நாட்டு வீரர்கள் மற்றும் 2 உள்நாட்டு வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி யார் யாரை எத்தனை கோடிக்கு தக்க வைக்கப் போகிறது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அணித் தலைவர் ரோகித் சர்மா, தவிர்க்க முடியாத வீரராக முதல் தேர்வாக உள்ளார். அவருக்கு ரூ.16 கோடி ஊதியம் வழங்கவுள்ளது.

2 ஆவது வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை மும்பை அணி தக்க வைக்கவுள்ளது. அவருக்கு ஊதியமாக ரூ.12 கோடி நிர்ணயிக்கப்படவுள்ளது. மும்பை அணியின் தூணாக விளங்கும் கிரென் பொல்லார்ட் 3 ஆவது வீரராகவும், இளம் வீரர் இஷான் கிஷன் 4 ஆவது வீரராகவும் தக்கவைக்கப்படவுள்ளனர். இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக மோசமான போர்மில் உள்ள ஹர்திக் பாண்ட்யாவும் அவரது சகோதரர் குருணால் பாண்ட்யாவும், சூர்யகுமார் யாதவ் ஆகிய வீரர்கள் மும்பை அணியிலிருந்து வெளியேற்றப்படவுள்ளனர். இதேபோல முன்னணி பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட்டும் வெளியேற்றப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

எனவே, குறித்த வீரர்களை பெரிய தொகைக்கு ஏலம் எடுக்க புதிதாக வரும் 2 அணிகளும் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.